Sunday, June 8, 2008

புதியதோர் உலகம் செய்வோம்

அழகாய் அன்பாய் அளவாய் அமைந்த
வளமும் வாய்ப்பும் வாழ்வில் நிறைந்த
பண்பும் நட்பும் தொழிலும் வளர்ந்த
புதியதோர் உலகம் செய்வோம் !


இனிமை சூழ இன்பங்கள் வளர
கண்ணீர் குறைந்து தண்ணீர் நிறைய
நிலம் நீர் காற்றும் நிம்மதியாய் உறங்க
புதியதோர் உலகம் செய்வோம்!

கலைகள் பலவும் கனிவாய் வளரும்
கல்வித் தரமும் உயர்வாய்ச் சிறக்கும்
எண்ணங்கள் யாவும் தூய்மையாய் இருக்கும்
புதியதோர் உலகம் செய்வோம்!

போர்கள் இல்லா அமைதி நிலைக்க
பாரில் பலப்பல சாதனைப் படைக்க
நிலவுக்கும் மலருக்கும் நேரம் ஒதுக்க
புதியதோர் உலகம் செய்வோம்!

விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் செய்வோம்
வீரத்தின் விளிம்பு வரை செல்வோம்
இனியொரு உதயம் பிறக்க வைப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் !

உளி எடுப்போம்! ஒளி வீச
துளித்துளியாய், மணி மணியாய்,
சிறிது சிறிதாய், அழகழகாய்,
புதியதோர் உலகம் செய்வோம்!





No comments:

Post a Comment

feel free to tell what you want!